Published : 07 Sep 2017 10:19 AM
Last Updated : 07 Sep 2017 10:19 AM

வேளாண் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: ‘நதிகளை மீட்போம்’ நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்

வேளாண் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.

‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்’ என்பதை வலியுறுத்தி நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நேற்று திருச்சி வந்தார். ஓடத்துறை அருகே அவர் பேசியது:

ஆண்டு முழுவதும் நதிகளில் நீர் ஓடிய காலம் மாறி, தற்போது சில மாதங்கள் மட்டுமே நீரோட்டம் இருப்பதால், கடந்த 25 ஆண்டுகளில் 15 முதல் 20 சதவீத மீன் இனங்கள் அழிந்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புழு, பூச்சி, பறவைகள் அழிந்துவிட்டால், பூமியில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் அழிந்து விடும். அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகளும் இருந்தால்தான், நமக்கு தேவையான உணவு உற்பத்தி செய்து, உயிர் வாழ முடியும்.

20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 16.5 சதவீதம் மட்டுமே பசுமைப்போர்வை இருந்தது. இதை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 33 சதவீதமாக்க வேண்டும் என்பதே நம் நோக்கம். பூமி அமைப்புக்கு ஏற்ப விஞ்ஞானரீதியாக மண்ணை வளப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் ஆலோசித்து, திட்ட வரையறை தயார் செய்துள்ளோம். நதிகள் விவகாரத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்து, அதை நிறைவேற்ற 15 ஆண்டுகள் ஆகும். அதன்பின் முறையாக செயல்படுத்தினால் 20 ஆண்டுகளில் காவிரியில் தற்போது இருப்பதைவிட 15 முதல் 20 சதவீத அளவுக்கு கூடுதல் நீர் ஓடும். 12 ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்து, உலக வரலாற்றில் இடம்பிடித்த தென்னிந்திய விவசாயிகள் இப்போது தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். வேளாண் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி எம்.பி ப.குமார், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் லெனார்டு பெர்னான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் ஜக்கி வாசுதேவ் புதுச்சேரிக்கு காரில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x