

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில். 10.05 மணிக்கு தான் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
94.03 சதவீத பேர் தேர்ச்சி: தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதன்படி 94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.38. மாணவர்கள் 3,49,697 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
8.17 லட்சம் பேர் எழுதிய தேர்வு: பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.
விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.