

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, பருத்தி பயிரிடப்பட்டிருந்த 10,000 ஏக்கர் வயலில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் நல்ல லாபம் கிடைத்து வருவதால், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். இதனால், கடந்த ஆண்டு 35,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பருத்தி சாகுபடி, நிகழாண்டு 40,000 ஏக்கராக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நன்னிலம், குடவாசல், கோட்டூர், கமலாபுரம், நொச்சிக்குடி, கருப்பூர், புனவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், பருத்தி பயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரை நீரேற்றும் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் உள்ள பருத்திப் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு: இதுகுறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் நன்னிலம் முகேஷ், கானூர் அழகர்ராஜ் ஆகியோர் கூறியது:
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து 60 நாட்களாக பராமரித்து வரும் பருத்திப் பயிர், தற்போதைய மழையால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது கவலை அளிக்கிறது.
பருத்தி பயிரிட்டு, பாத்தி அமைத்து 30 நாட்களுக்குப் பிறகு ஒரு முறையும், 90 நாட்களுக்குப் பிறகு ஒரு முறையும் தண்ணீர் விட்டாலே போதுமானது. ஆனால், தற்போதைய கனமழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பது பருத்திச் செடிகளுக்கு உகந்ததல்ல.
இதனால், மாவட்டம் முழுவதும் 10,000 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள நீரை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், பருத்திச் செடிகள் மழையில் பாதித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.