Published : 08 May 2023 06:04 AM
Last Updated : 08 May 2023 06:04 AM

குன்னூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளி இறந்த வழக்கில் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

உதகை: குன்னூர் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளி உயிரிழந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 2 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டுமென, நீலகிரி நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த உபதலை காந்தி நகரை சேர்ந்த சபாபதி என்ற ஓய்வுபெற்ற மத்திய அரசு அலுவலரின் மனைவி விமலா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2020 அக்டோபர்19-ம் தேதி குன்னூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்துள்ளது.இந்நிலையில், 2020, அக்.24 அன்றுஅவர் நினைவை இழந்துவிட்டார். இதையடுத்து, உடனடியாக கோவை மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், 2020, நவ.2 அன்று உயிரிழந்தார்.

‘‘சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல், இதுபோன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரமடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவைப்பது பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி. முதலுதவி மட்டும் வழங்கிவிட்டு, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் அவர் உயிர்பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே அவரது உயிரிழப்புக்கு காரணம்’’ எனக் கூறி, நீலகிரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சபாபதி வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கில், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பி.ஆல்துரை வாதாடினார். ஆணையத்தின் தலைவர் சித்ரா அளித்த தீர்ப்பில், ‘‘மருத்துவமனை சார்பில் நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஓர் ஆவணமும்சமர்ப்பிக்கப்பட்டு, சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை.சிகிச்சை அளிப்பதில் அலட்சியம்இருந்திருக்கிறது.

எனவே, நோயாளி குடும்பத்தினரிடம் வசூலித்த ரூ. 1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து85 ஆயிரத்தை, 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x