Published : 08 May 2023 06:53 AM
Last Updated : 08 May 2023 06:53 AM

விசிக மாவட்ட செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள் பட்டியலினம் சாராதவர்கள், பெண்களுக்கு 10 சதவீத வாய்ப்பு: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள், தலா 10% பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் புதிய முயற்சியை நாம் மேற்கொள்கிறோம். பலருக்கு வழிகாட்டக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை நாம் எடுத்திருக்கிறோம். விசிகவை சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து, அரசியல் இயக்கமாக உருவாக்கும் பரிணாம மாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்.

பட்டியலினத்தவர் அல்லாதவர்கள், பெண்கள், இளம் தலைமுறை ஆகியோர் இணையவேண்டும் என அறைகூவல் விடுத்தோம். அதன் அடிப்படையில் கட்சியில் முஸ்லிம்மக்கள் கணிசமாகச் சேர்ந்தனர். பட்டியலினம்அல்லாத கிறிஸ்தவர்கள், பிசி, எம்பிசி வகுப்பைச் சேர்ந்த சிலரும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 10 சதவீதம் பட்டியலினத்தவர்கள் அல்லாதோருக்கு இடமளிக்க இருக்கிறோம். இதை ஒதுக்கீடு என்பதைவிட அதிகாரபரவலாக்கம் என்றே சொல்ல வேண்டும்.

அடுத்தபடியாக 10 சதவீதம் பெண்கள் மாவட்டச் செயலாளர்களாக கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், கட்சி நீடித்து நிலைத்திருக்க அடுத்த தலைமுறையினரை இணைப்பது அவசியம். எனவே, 25 சதவீத இளம் தலைமுறையினர் இப்பொறுப்பில் கட்டாயம் இருக்கவேண்டும்.

இவையெல்லாம் கட்சியை அரசியல் இயக்கமாக வலுப்படுத்துவதற்கான யுக்தி என்பதை உணர வேண்டும். இது கட்சியின் அகநிலை பண்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை செயல்திட்டம். இதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதை மாற்ற வேண்டும் என்ற நெருக்கடியைத் தர வேண்டாம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x