

சென்னை: சென்னையில் 2 வாரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூலம் ஆவின் ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சேலம், திருச்சி, மதுரையிலும் இதுபோல் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோடைக்காலத்தை ஒட்டி ஆவின் நிறுவனம் சார்பில், பேட்டரி வாகனம் மூலமாக, ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை கடந்த 20-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா பகுதிகள் போன்ற அனைத்து இடங்களிலும் 33 பேட்டரி வாகனங்கள் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை தொடங்கப்பட்டது.
இந்த வாகனத்தில் குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாடா, கேன்டி, ப்ரீமியம் உள்ளிட்ட சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே இதை மேலும் விரிவுபடுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ப 10 புதிய தொழில் முனைவோர்கள் பேட்டரி வாகனம் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை செய்ய விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சேலம், திருச்சி, மதுரையில் பேட்டரி வாகனம் மூலமாக, ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், “சென்னையில் பேட்டரி வாகனம் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
சேலம், திருச்சி, மதுரையில் பேட்டரி வாகனம் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்த 3 மாவட்டங்களில் தலா 10 பேட்டரி வாகனங்கள் மூலமாக, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
ரூ.1,500 லாபம் கிடைக்கும்: குளிர்சாதன பெட்டியுடன் சேர்ந்து ஒரு பேட்டரி வாகனம் விலை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். இந்த பேட்டரி வாகனத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஐஸ்கிரீம் வகைளை ஏற்றி விற்க முடியும். இதன்மூலம், தினசரி ரூ.1,500 வரை லாபம் சம்பாதிக்க முடியும்.
பேட்டரி வாகனத்தில் ஒருமுறை சார்ஜிங் செய்தால், 30 கி.மீ. வரை பயணிக்க முடியும். குளிர்சாதனப் பெட்டி 8 மணி நேரம் வரை குளிர்ச்சியுடன் இயங்கும். பெண்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்குக் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க இது சிறந்த வாய்ப்பு என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.