அரசு விரைவு பேருந்துகளில் பெண்கள் முன்பதிவுக்கு 4 இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமல்

அரசு விரைவு பேருந்துகளில் பெண்கள் முன்பதிவுக்கு 4 இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமல்
Updated on
1 min read

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. 300 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில், பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கெனவே 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த இருக்கைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும் என்று சமீபத்தில் முடிந்த போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், தற்போது 4 இருக்கைகள் ஒதுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகளும், இருக்கை மட்டும் உள்ள பேருந்தில் 4 இருக்கைகளும், இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 2 இருக்கை, 2 படுக்கைகளும் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் (www.tnstc.in) அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யும்போது, பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும். இருக்கைகளை பெண்கள் முன்பதிவு செய்யாத பட்சத்தில் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in