

சென்னை: சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பதவி ஏற்று இன்றுடன் இரண்டாண்டு நிறைவடைகிறது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக 08.05.2021-ல் சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிப்பதே தனது முதல் பணி என பதவி ஏற்ற அன்று உறுதி அளித்தார். அதன்படி, ரவுடிகளை ஏ, பி, பி1 என தரம் பிரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குறிப்பாக சைபர் குற்றங்களை தீர்ப்பதில் அதிக அக்கறை காண்பிக்கிறார். காவல் துறையில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த முன்னுரிமை அளிப்பதோடு, காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உன்னிப்பாக கண்காணித்து அதுகுறித்து விவரங்களை உடனுக்குடன் கேட்டு பெறுகிறார்.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். குற்றவாளிகள் மீது உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தகவல்களையும் எழுத்து பூர்வமாக பெறுவதில் உறுதியாக உள்ளார்.
பாரபட்சமின்றி அபராதம்: போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பாரபட்சம் இன்றி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை, குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கண்டிப்புடன் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
விபத்து உயிரிழப்பு இல்லாத ஆண்டை நோக்கி செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு திறன்பட செயல்படுத்தி வருகிறார்.
காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழும்போது உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்திருந்தால் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கை பேணுவதில் ஆரம்பத்தில் சிறு சறுக்கலை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தற்போது கடின உழைப்பால் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து சென்னை காவல் ஆணையர் பணியில் இன்றுடன் இரண்டாண்டுகளை நிறைவு செய்கிறார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.