Published : 08 May 2023 06:05 AM
Last Updated : 08 May 2023 06:05 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி குப்பை கிடங்குக்கான இடம் ஒதுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தினமும் 13.08 டன் வரை குப்பை சேகரமாகின்றன. இந்த குப்பையை, சுந்தரநடப்பு பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிடங்கில் ஊழியர்கள் கொட்டி வந்தனர்.
இந்நிலையில், குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டி வைக்காமல், மட்கும் குப்பைகளை நுண்உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், மட்காத குப்பைகளை தொழிற்சாலை களுக்கும் விற்பனை செய்ய வேண்டுமென, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சுந்தரநடப்பு குப்பை கிடங்கு அகற்றப்பட்டு, குறுங்காடாக மாற்றப்பட்டது. மேலும், சிவகங்கை நகரில் மானா மதுரை சாலை தெற்கு மயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டி நுண்உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த இடங்களில் குப்பைக்கு தீ வைப்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையிலான கவுன்சிலர்கள், 9 மாதங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்குக்கு 6 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியர்பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்காத நிலையில், நகராட்சி நிர்வாகம் அதிரடியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிசிஐடி அலுவலகம் முன்பு குப்பையை கொட்டி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT