Last Updated : 05 Sep, 2017 11:31 AM

 

Published : 05 Sep 2017 11:31 AM
Last Updated : 05 Sep 2017 11:31 AM

92 வயதிலும் வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்: வாசிப்புக்கு முதுமை தடையல்ல என்கிறார்

நாளிதழ் வாசிப்பதை நாள் விடாமல் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு வாசிப்பின் மீது நேசிப்பு ஏற்படுவதற்கு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் டி.வி. சிவசுப்பிரமணியன் (92).

இவர், திருச்சி மாவட்டம், திம்மாச்சிபுரத்தில் 1925-ல் பிறந்தார். அங்கு பள்ளி படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின்னர், கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அங்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் ஆசிரியர் படிப்பை முடித்தார். மதுரை பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் ஒரு ஆண்டும், பின்னர் மதுரை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிந்து 1983-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

தற்போது, மதுரை சர்வேயர் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். டி.வி. சிவசுப்பிரமணியன், 92 வயதிலும் நல்ல பார்வைத் திறனுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த வயதிலும் புத்தகம், நாளிதழ் வாசிப்பின் மீதான காதல் குறையாமல் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்கிறது. காலை நேரம் முழுவதும் நாளிதழ் வாசிக்கிறார். தான் படித்த தகவல்களை பேரன், பேத்திகளிடம் பகிர்ந்து கொள்கிறார்.

இதுகுறித்து டி.வி.சிவசுப்பிரமணியன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: புத்தகம், நாளிதழ் வாசிப்பு பழக்கம் அறிவாற்றல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். இன்றைய இளைய தலைமுறையினர் கணினி, செல்போனில் பயனற்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படும்.

நாளிதழ் வாசிப்பதை ஒருநாள் கூட தவற விட்டதில்லை. என்றார்.

‘பரந்த அறிவுக்கு வயது ஒரு தடையல்ல’ என்பதையும், ‘வயதுக்கு தான் முதுமை, வாசிப்புக்கு முதுமையே கிடையாது’ என்பதையும் 92 வயதிலும் நிரூபித்து வருகிறார் சிவசுப்பிரமணியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x