

சென்னை: தமிழகத்திலுள்ள 1,281 தரைப் பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்றும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் உள்ள 1,281 தரைப்பாலங்களை 2026-க்குள் உயர்மட்டபாலங்களாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும் பாலப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், முதன்மை இயக்குநர் சாந்தி, தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், முருகேசன், செல்வம், இளங்கோ, கீதா மற்றும் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
விரிவான கள ஆய்வு: இந்த கூட்டத்தில், 2026-ம் ஆண்டுக்குள் அனைத்து தரைப் பாலங்களும், உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும். பாலப் பணிகள் கட்டுமானத்துக்கு முந்தைய பணிகளான மின் கம்பங்கள் இடம் மாற்றம், குடிநீர் குழாய்கள் இடம் மாற்றம், மரங்களை அகற்றுதல், நில எடுப்பு பணிகள் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விரிவான கள ஆய்வுக்கு பிறகு மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.
மதிப்பீடு தயார் செய்யும்போது, கள ஆய்வுகள், ஆற்றின் நீரியியல்விவரங்கள், மண் பரிசோதனைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் செயல்பாட்டின்போது காலதாமதத்தை தவிர்க்க முடியும்.
பொதுவாக பாலப்பணிகளை மேற்கொள்ள மழைக் காலங்கள்இல்லாதபோது அடித்தளம் அமைக்கும்பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாலப்பணிகள் முக்கியம் என கருதி பொறியாளர்கள், ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு மேற்கொண்டு தரத்தை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.