

சென்னை: அகில இந்திய அளவில் சிறந்தசெயல்பாட்டுக்காக சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவமனைக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் - சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை (மருத்துவமனை) 2005-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். அயோத்தி தாசர் பண்டிதர் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் அமைந்துள்ளது.
200 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளி நாடுகளில் இருந்து நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமில்லாமல், சித்த மருத்துவ ஆராய்சிகளும் நடைபெறுகின்றன.
8 சித்த மருத்துவ துறைகளில் எம்டி சித்தா மேற்படிப்பும், 6 துறைகளில் பிஎச்டி சித்த மருத்துவ ஆராய்ச்சி படிப்பும் பயிற்று விக்கப்படுகிறது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பும் 2022-23-ம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் மருத்துவர் ஆர்.மீனா குமாரி உள்ளார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரத்தை மருத்துவமனைகளுக்கான தேசிய தர அங்கீகார வாரியம் (NABH) கடந்த 2018-ம் ஆண்டு வழங்கியது. இந்தஅங்கீகார சான்று மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். இடையில் கரோனா பெருந்தொற்றால் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தொடர்ச்சியாக 2-வது முறையாக மருத்துவமனைகளுக்கான தர அங்கீகாரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ் கோடேசா மறு அங்கீகார சான்றிதழை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனா குமாரியிடம் வழங்கினார்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலர் ஸ்ரீ பிரமோத் குமார் பாடக், மருத்துவமனைகளுக்கான தேசிய தர அங்கீகார வாரியம் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீ அதுல் மோகன், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், தலைமை செவிலியர் அதிகாரி ஆகியோர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ் கோடேசா பேசுகையில், “தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் சேவைகள், தினசரி நோயாளிகளின் வருகை எண்ணிக்கை, சராசரிமருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அகில இந்திய அளவில் மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர். மீனா குமாரி பேசுகையில், “இந்த சான்றிதழைப் பெறுவதற்காக அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். இதற்குஅடுத்த கட்டமாக இம்மருத்துவமனையில் இயங்கி கொண்டிருக்கும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கான தர சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.