Published : 07 May 2023 04:20 AM
Last Updated : 07 May 2023 04:20 AM

புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடியவர் மோடி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்

சென்னை: புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேடிய பிரதமர் மோடிக்கு, பயங்கரவாதம் குறித்து பேச தகுதி இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்லாரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி சரணடைந்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத பாஜகவினர், காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை அறிந்துகொண்டு பேசுவது நல்லது. கடந்த 1984 மக்களவைத் தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, தேர்தல் அரசியலில் வெற்றிபெற அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க அத்வானி தலைமையில் ரதயாத்திரை மேற்கொண்டது.

அதனால் ஏற்பட்ட கலவரத்தால் நூற்றுக்கணக்கான அப்பாவிமக்கள் பலியானார்கள். டெல்லி,உத்தரபிரதேச மாநிலங்களில் அப்பாவி மக்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் தகர்த்தவர்கள் பாஜகவினர். உத்தரபிரதேசத்தில் விவசாய சங்கங்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது வாகனத்தை ஏற்றி 7 பேரை படுகொலை செய்தவர் மத்திய பாஜக அமைச்சரின் மகன் என்பதை மோடியால் மறுக்க முடியாது.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, 2002-ல் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை தடுக்கத் தவறிய காரணத்தால் சிறப்புப் புலனாய்வு குழுவினரால் 9 மணி நேரம் அன்றைய முதல்வர் மோடி விசாரிக்கப்பட்டார். குஜராத் கலவரத்துக்கு காரணமாக இருந்த அன்றைய குஜராத் மாநில அமைச்சர் அமித்ஷா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதை எவராலும் மறக்க இயலாது.

புல்வாமா தாக்குதலில் 40 பேர் பலியானதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். 40 ராணுவ வீரர்களின் வீரமரணத்தை வைத்து 2019 மக்களவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடிய பிரதமர் மோடிக்கு பயங்கர வாதத்தை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது கூறும் குற்றச்சாட்டை மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x