Published : 22 Jul 2014 08:16 AM
Last Updated : 22 Jul 2014 08:16 AM

ஏட்டு கொலை வழக்கில் கவுன்சிலர் மகன்கள் கைது: மணல் கடத்தல் புள்ளிகள் ஓட்டம்

தக்கோலம் அருகே டிராக்டர் ஏற்றி தலைமைக் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேமுதிக பெண் கவுன்சிலரின் மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல் சம்பவத்தை தடுக்க சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் தலைமைக் காவலர் கனகராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றனர். புரிசை என்ற கிராமத்தில் உள்ள ஆற்றுப் பகுதியில் தக்கோலம் தேமுதிக பெண் கவுன்சிலர் செண்பகவள்ளியின் மகன் சுரேஷ் மற்றும் 5 பேர் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இவர்களை போலீஸார் பிடிக்க முயன்றபோது, தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுரேஷ் (23) திங்கள்கிழமை பகல் 1 மணியளவில் முறுங்கை என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், கனகராஜ் கொலை சம்பவம் நடந்த சமயத்தில் அவரது தம்பி சத்யா (21) மற்றும் சங்கர், சம்பத், பசுபதி ஆகியோர் உடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்யாவையும் போலீஸார் கைது செய்தனர். தக்கோலம் அடுத்த முறுக்கை, புரிசை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய கொசஸ்தலை ஆற்றில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் கடத்தல் அதிக அளவில் நடக்கிறது.

தினமும் 400 முதல் 500 லாரிகளில் திருடப்படும் மணல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தக்கோலம் பகுதியில் உள்ள மணல் கடத்தும் முக்கிய நபர்கள் பலர் தலைமறைவாகிவிட்டனர். லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் ஏற்றும் கூலித் தொழிலாளிகள் பலரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x