Published : 07 May 2023 04:23 AM
Last Updated : 07 May 2023 04:23 AM
கடலூர்: சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்தியது தொடர்பாக மருத்துவக் குழுவினர் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், 'பால்ய விவாகம்' எனப்படும் குழந்தைகள் திருமணம் நடத்துவதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் சென்றன. இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டு அவர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உரிய விசாரணை நடத்தி வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு, இரு விரல் பரிசோதனை செய்யப் பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு எனவும் சமீபத்தில் தமிழக ஆளுநர் ரவி கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திர சேகர், ஆளுநர் ரவி கூறியது சரியே என்றும், போலீஸார் வேண்டுமென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் பேட்டியளித்தார்.
இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்பாபு, கடலூர் மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி, சென்னை கூடுதல் கண்காணிப்பாளர் கமலக் கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் வந்தனர்.
பின்னர் ஏஎஸ்பி அலுவலகம் சென்று ஏஎஸ்பி ரகுபதியிடம் ஆலோசனை நடத்தினர். அக்குழுவினர் ஏஎஸ்பியிடம் குழந்தை திருமணம் குறித்து வழக்கு பதிவு செய்யபட்ட விவரங்களை கேட்டறிந்து, அந்த வழக்குகளில் எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகள் நடந்தது? எந்த மருத்துவமனையில் சோதனைகள் நடைபெற்றன? என்றும் கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடலூர் புறப்பட்டு சென்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தனர். அன்று பணியில் இருந்த மருத்துவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றனர். இக்குழுவினர் மீண்டும் நாளை (மே 8) விசாரணைக்கு வர உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT