

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக நடிகர் கமலஹாசன் கூறியிருப்பது கடும் கண்டனத்துக் குரியது என்றும் ஊழலை நிரூ பிக்க அவர் தயாரா எனவும் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் நடத்திவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது டன், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, அதனை நடத்திவரும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தன. இதையடுத்து நிருபர்களுக்கு கமலஹாசன் பேட்டி அளிக்கும்போது, என்னை கைது செய்தால், சட்டம் என் னைப் பாதுகாக்கும் என்று கூறிய துடன், தமிழகத் தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சிஸ்டம் சரியில்லையா?
அமைச்சர் டி.ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்க ளுக்கு பேட்டி அளிக்கும்போது, “நடிகர் கமலஹாசன் நடத்தும் நிகழ்ச்சியை பிரபலப்படுத்து வதற்காக தமிழக அரசு மீது சேற்றை வாரி வீசி, எங்களை வம்புக்கு இழுக்கக்கூடாது. தமிழ் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி யென்றால் அரசியலமைப்பு சட்டமே சரியில்லை என்று சொல் கிறாரா? தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக அவர் கூறியிருப் பது கடும் கண்டனத்துக்குரியது. ஊழல் இருப்பதாகக் கூறும் அவர் அதனை நிரூபிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்’’ என்றார்.
வழக்கு தொடருவோம்
இதற்கிடையே கோவையில் நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலு மணி நிருபர்களிடம் பேசும்போது, நடிகர் கமல் பொத்தாம் பொதுவாக குறைகளைக் கூறி, தமிழக அரசை விமர்சித்து வருகிறார். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசு வதற்கு, திரைத் துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திரைத் துறைக்கு பல்வேறு நன்மைகளை அரசு செய்துள்ளது. ஆனால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.
அவரது தனிப்பட்ட செயல்பாடு களை எங்களால் விமர்சிக்க முடி யும். எனினும், நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. இது வரை அவர் எவ்வளவு வரி கட்டி யுள்ளார் என்பதை விளக்குவாரா? இனியாவது, அரசை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், அவர் மீது வழக்குத் தொடருவோம் என்றார்.
நீதிமன்றத்துக்கு செல்லலாம்
கோவை விமான நிலையத்தில் நேற்று மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை நிருபர் களிடம் கூறியதாவது: நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்து கருத்துகளை தெரிவிக்க வேண் டும். ஆட்சியில் தவறுகள் இருந் தால் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். மக்களுக்கு மட்டும் தான் அதிமுக அஞ்சும். மற்ற கட்சிகளுக்கு அஞ்சாது என்றார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சில நாட்க ளுக்கு முன்பு சென்னையில் நிருபர்களிடம் பேசும்போது, கமல ஹாசன் ஒரு ஆளே கிடையாது. அவரது புகாருக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.