நில மோசடி வழக்கு: கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நில மோசடி வழக்கு: கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மோசடியாக நிலம் விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு குழுவை அமைத்து கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சவுமியா என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் தமது கணவர் ஞானசண்முகத்திற்கு சொந்தமாக 5.9 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு அந்த நிலம் தனக்கு சொந்தமானது.

ஆனால் தமது கணவரின் நண்பராக இருந்த கதிர்வேலு முறைகேடாக அந்த நிலத்தை அவரது பெயருக்கு மாற்றிவிட்டார். இதுதொடர்பாக கதிர்வேலு மீது நில மோசடி வழக்குப் பதிவு செய்யக்கோரி அளித்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கதிர்வேலு மீது நில மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கதிர்வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர், சவுமியா ஞானசண்முகத்தின் மனைவி இல்லை. இதுதொடர்பாக, அவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்" என்று வாதிட்டார். அப்போது காவல்துறை தரப்பில், "இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று விற்பனை பத்திரங்கள் மற்றும் இறந்த ஞானசண்முகத்தின் இறப்பு தேதி உள்ளிட்டவை முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த சிபிசிஐடி, சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி விசாரணை முடிவில் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in