Published : 07 May 2023 12:25 AM
Last Updated : 07 May 2023 12:25 AM
‘2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதலே தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது. இதனால், தமிழகத்தில் 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி, அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியாக நடந்து வருகிறது’ என்கின்றனர் ஆட்சியாளர்கள். இதையொட்டி அவர்கள் அடுக்கும் சான்றுகள்:
‘தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த சமயத்தில் நிலவிய கடுமையான நிதி பற்றாக்குறையை சமாளித்தும், மத்திய அரசு மாநிலத்துக்கு தேவையான அளவுக்கு துணை நிற்காவிட்டாலும், மக்களுக்கு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அவர் இட்ட முதல் கையெழுத்தின் பயனாகத்தான் பெண்கள் இன்று பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளார். இவ்வாறு பெண்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தி விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பருத்தி மற்றும் நூல் விலை குறைவிற்கும் நெசவுத் தொழில் சீராக நடைபெற்று நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கிராமப்புற மாணவர்களுக்காக, கடந்த 2022 மார்ச் 1-ம் தேதி ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கபட்டதில் இருந்து 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை தமிழ்நாட்டிலுள்ள 1300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டமே அனைத்து மாணவர்களுக்குமானதுதான். நகர்ப்புற மாணவர்களாவது பயிற்சி மையங்களுக்கு போகின்ற வாய்ப்பு அதிகம். கிராமப்புற மாணவர்களுக்குத்தான் 'நான் முதல்வன்' திட்டமானது அதிகமாகத் தேவை. தமிழக இளைஞர்கள் அனைவரும் ‘நான் முதல்வன்’ எனச் சொல்ல வைக்கும் இந்தத் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொடர் கண்கணிப்பில் வைத்திருக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் இருந்ததை விட தற்போது கூடுதலாகியுள்ளது. இந்த பிரிமீயம் தொகை கடந்த ஆட்சி காலத்தில் 699 ரூபாய், தற்போது 849 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காப்புரிமை தொகை கடந்த காலங்களில் ரூ.2 லட்சம், தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், கடந்த ஆட்சி காலத்தில், 970 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், தற்போது 1733 மருத்துவமனைகளாக உள்ளது. இத்திட்டத்துக்காக அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.553 கோடியும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.595 கோடியும் என மொத்தம் ரூ.1148 கோடி காப்பீட்டுத் தொகை கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் தொடங்கிய நாள் முதல் கடந்த ஆண்டுதான் அதிகபட்ச தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2,86,579 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில், ரூ.33.56 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலையில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 30,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று திராவிட மாடல் அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், தனியார் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதன்மூலம், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் சமுதாயத்தினுடைய அடையாளமாக, சமூக நீதியினுடைய அடையாளமாக அமைந்திருக்கிறது.
இப்படி, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான - அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்களை நிறைவேற்றி, 75 ஆண்டுகளை நெருங்கும் திமுக, அனைவரின் வளர்ச்சிக்கான திராவிட மாடல் அரசாக பயணித்து வருகிறது’ என்கின்றனர் ஆட்சியாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT