

சென்னை: நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள கடற்கரைப் பகுதியை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.
சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ. நீள கடற்கரையை மறுசீரமைத்து புத்தாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பொதுப்பணித் துறை, மாநகராட்சி, சுற்றுலாத் துறைகளுடன் இணைந்து இதை செயல்படுத்த தனி நிறுவனம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 30 கி.மீ பகுதி ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் முதல் கட்டமாக, நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள 5 கி.மீ நீள பகுதியை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இந்தப் பணிக்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் பல்வேறு கடைகள், சைக்கிள் பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், மருத்துவ வசதி, புல்வெளி மற்றும் அமரும் வசதி, வாகன நிறுத்த வசதி, கழிவறை, சுற்றுலா சார்ந்த பணிகள், செயற்கை நீருற்றுகள், கடற்கரை ஓரத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், சாகச அம்சங்கள், உணவகம், நடைபாதை, காட்சியம் உள்ளிட்டவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு ஆய்வுகள், கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்ற உடன், அறிக்கையின் அடிப்படையில் மேம்பாட்டு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது.