Published : 06 May 2023 07:00 AM
Last Updated : 06 May 2023 07:00 AM

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு: மனு திரும்ப பெறப்பட்டது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா கல்லூரி உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவி்த்ததையடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை போலீஸார் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்தமனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஹரிபத்மனுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு எதிராக தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹரிபத்மன் தரப்பி்ல் வாதிடப்பட்டது. போலீஸார் தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு தள்ளிவைப்பு: மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டியிருப்பதால் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குற்றம் சாட்டப்பட்ட ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, விசாரணையை வரும் ஜூன் 16-க்குதள்ளி வைத்தார். அதையடுத்து இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x