

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஊரை விட்டு தள்ளிவைத் ததாகக் கூறி, 7 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஊரை விட்டு வெளியேறப் போவதாகவும் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள நெற்குப்பை பேரூராட்சி பூசணிக்களம் கிராமத்தில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள கண்மாயில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் 7 குடும்பங்களை தள்ளிவைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது: எங்கள் 7 குடும்பங்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்க மறுக்கின்றனர். கோயில் விழாக்களுக்கு எங்களிடம் வரி வசூலிக்கவில்லை. எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால், மற்ற குழந்தைகள் பேச மறுக்கின்றனர்.
சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு எங்களை அழைப்பதில்லை. நாங்கள் சென்றாலும் அவமதிக்கின்றனர். எங்களுடன் பேசுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். எங்கள் விளைநிலங்களில் வேலை செய்ய ஆட்கள் வருவதில்லை. கண்மாயில் இருந்து தண்ணீர் பாய்ச்ச அனுமதியில்லை. இது தொடர்பாக வருவாய்த் துறை, போலீஸாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையெனில், ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.