

திருப்பத்தூர்: திருவண்ணாமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலை மிட்டாய் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், 4 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் திருவண்ணாமலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
சுழற்சி முறையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 4 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், திருவண்ணாமலையில் நேற்று காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல காவலர்கள் வியர்வையுடன் பணி செய்து கொண்டிருந்தனர்.
இதைக் கண்டதும் திருப்பத்தூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், உடனடியாக ஒவ்வொரு காவலர்கள் அருகேயும் வாகனத்தில் சென்று, அவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினார். வெயிலில் பணியாற்றி வந்த காவலர்களுக்கு எஸ்.பி.,யின் இந்த உபசரிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்ததால், ஆர்வமுடன் கடலை மிட்டாய் சாப்பிட்ட காவலர்கள் உற்சாகமுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.