Published : 06 May 2023 04:10 AM
Last Updated : 06 May 2023 04:10 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காஞ்சனகிரி மலை கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பொது மக்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் காஞ்சனகிரியில் மலை மீது சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் மற்றும் ஏரி, குளம், நீர்நிலைகள் உட்படலாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளின் எல்லைகளில் உள்ளது. இதன் காரணமாக, 2 ஊராட்சிகளுக்கு இடையே எல்லை பிரச்சினை கடந்த சிலமாதங்களாக நீடித்து வருகிறது. ஊராட்சி எல்லையை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் முன்னிலையில் இருதரப்பினரை யும் அழைத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, பழமை வாய்ந்த காஞ்சனகிரி மலை கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானவர்கள் வந்து சிவபெருமானை தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு இரு ஊராட்சிகளின் எல்லை பிரச்சினை காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று கோயிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு கருதி ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலைக்கு கீழ் மற்றும் மேல்பகுதியிலும் பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால், லாலாப்பேட்டை கிராம மக்கள் சிலர் கோயில் கீழே நடராஜர் சிலை வைத்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். இதற்கு, காவல்துறையினர் அனுமதியில்லை என பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள சிவன்கோயிலில் வைத்தனர். பின்னர், அங்கு வந்த இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் மற்றும் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் மற்றும் இந்து முன்னணியினர், பொதுமக்கள் காவல்துறையின ரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பிரச்சினை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை கோயிலை தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இருந்தால் கொண்டு வந்து காட்டுங்கள். அதன் பிறகு நாங்கள் அனுமதி வழங்குகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இந்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளதாக காவல்துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT