Published : 05 May 2023 05:02 PM
Last Updated : 05 May 2023 05:02 PM

காஞ்சிபுர நில மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: காஞ்சிபுரத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து மோசடி செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை மற்றும் சார் பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே எட்டு கிரவுண்ட் நிலத்தை, 1981-ஆம் ஆண்டு ராஜீவ் பர்மா,சஞ்சீவ் பர்மா உள்ளிட்ட 4 பேர் வாங்கியுள்ளனர். கொல்கத்தாவில் வசித்து வந்த இவர்கள், நிலத்தின் வில்லங்கச்சான்றை பார்த்த போது, அந்த நிலத்தை காஞ்சிபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சட்டவிரோதமாக, போலி ஆவணங்கள் மூலம் தனது மகன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது.

பின்னர், 20 கோடி மதிப்பிளான இந்த நிலத்தின் பத்திரத்தை கொண்டு வெவ்வேறு வங்கிகளில் இருந்து சுமார் 10 கோடி வரை கடன் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், முறையாக விசாரணை நடத்தவில்லை. இந்த மோசடிக்கு துணைபோன அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிவாசகம், "மனுதாரர்களின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததுடன் வங்கிகளையும் ஏமாற்றியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளின் துணையோடு, அகற்றி உள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளை, போலீஸார் வழக்கில் சேர்க்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்" என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து காவல் துறை மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x