

புதுச்சேரி: “கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாடல்” என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், ஏழை நோயாளிகள் இறக்க நேரிட்டால் அவர்கள் உடலை கொண்டு செல்ல வழக்கத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி ஜிப்மர் எதிரே அந்நிர்வாகத்தைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் எம்.பி திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், மூன்று மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், "ஜிப்மர் மீண்டும் மக்கள் மருத்துவமனையாக தொடர வேண்டும். நாட்டில் பல விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. என்.எல்.சி விற்க முயற்சி செய்கின்றனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்கினார், பல தனியார் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியிலோ, அனைத்து அரசு சொத்துக்களும் தனியாருக்கு தற்போது விற்கப்படுகின்றது. இது தான் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
நான் காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை. இதுதான் உண்மை நிலை. இடஒதுக்கீட்டுக்கு எதிராகதான் தனியார்மயத்தை முன்னிறுத்துகின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கைகளை எழுப்பக் கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் எளிய மக்கள் கல்வி, வேலை பெறக்கூடாது என்ற நிலைப்பாடு தான் சனாதனம் என்று நாங்கள் குறிப்பிடுகின்றோம்.
தற்போது ஜிப்மரில் கர்ப்பிணி பெண்கள் தமிழகத்திலிருந்து சிகிச்சைக்கு வந்தாலும் உடன் அனுமதிப்பதில்லை. விண்ணப்பித்து அனுமதி பெற்றால்தான் சிகிச்சை பெற முடியும். ஏழைகள் இறந்தால் அவர்களுக்கு தரப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்திவிட்டனர். தற்போது 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டண முறையை அறிவித்துள்ளனர். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை என்கின்றனர். அந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும்.
மொழி கலப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்களை கொண்டு வந்துள்ளார்கள். ஜிப்மரில் வட இந்தியர்களை நியமித்தால் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சையளிப்பார்கள். நோயாளியின் வலியை எப்படி தெரிந்துகொள்வார்கள். ஒரே நாடு ஒரே கலாச்சாரத்தை திணிக்க மருத்துவத் துறையையும் மத்திய மோடி அரசு பயன்படுத்துகின்றது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக்கி தனியாருக்கு ஒப்படைக்கும் உள்நோக்கத்துடன் தான் உயர் சிகிச்சைக்கு கட்டண முறையை அறிவித்துள்ளனர். ஏனெனில், அதானியின் சொத்துகள் அனைத்தும் மோடியின் சொத்துகள். உலகப் பணக்காரர்களில் மோடி மூன்றாவது இடத்தில் இருக்கின்றார் என்பதுதான் அர்த்தம், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரைக் கிழிந்திருக்கும். கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் இதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாடல்.
மோடி அரசின் ஆட்சி இன்னும் ஓராண்டு காலம் தான் ஆட்சியில் இருக்கும். அது தூக்கி எரியப்படவேண்டும் என ஜனநாயக கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கின்றது, இந்தியாவில் எந்தக் கட்சிகளுக்கும் இல்லாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சோதனை முறையில் மாவட்ட செயலர்கள் பதவிகளில் 10 சதவீதம் பெண்களுக்கும், 10 சதவீதம் தலித் அல்லாதவர்களும், 25 சதவீதத்தை இளையோருக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது அனைத்து பெரிய கட்சிகளுக்கும் இது சவாலாக மாறும். கட்டண முறைக்கான ஆணையை ஜிப்மர் ரத்து செய்யவிட்டால் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும்" என்று திருமாவளவன் கூறினார்.