Published : 05 May 2023 06:21 AM
Last Updated : 05 May 2023 06:21 AM
சென்னை: சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட ‘ப்ரீடம்’ பொருட்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் விற்பனைக்கு சந்தைப் படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புழல், வேலுார், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மூலம் துணிகள், தேங்காய் மற்றும் கடலைஎண்ணெய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
அதேபோல், திருச்சி மகளிர் சிறையில் உள்ள கைதிகள் கோதுமை, ராகி வகை ரொட்டித் துண்டுகள் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் இந்த பொருட்களை ‘ப்ரீடம்’ எனும் பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்தும் பணிகளை சிறைத் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழக சிறைத் துறை சார்பில் ‘ப்ரீடம்’ பொருட்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் போர்வை, நைட்டி, தேங்காய் எண்ணெய்,மண்புழு உரம் உட்பட பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சந்தையில் ரூ.17,000 வரை விற்பனையாகியுள்ளது.
இந்த சந்தை இன்றுடன் (மே 5) நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து, ‘ப்ரீடம்’ பொருட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி காவல் ஆணையரக அலுவலகங்களிலும் சந்தைப்படுத்த சிறைத் துறை திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT