Published : 16 Sep 2017 10:32 AM
Last Updated : 16 Sep 2017 10:32 AM

கோயில்களில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் விற்பனை? - ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக கோயில்களில் விற்பனை செய்யப்படும் நெய் தீபத்தில் விலங்கு கொழுப்பு, வனஸ்பதி, வேதிப்பொருட்கள் ஆகியவை கலக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு செய்து பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் ஆனந்தவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக கோயில்களில் விற்கப்படும் நெய் விளக்குகளில் உண்மையில் நெய் இருப்பதில்லை. வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு கலந்த எண்ணெய், வேதியியல் பொருட்கள் ஆகியவற்றை கலந்து நெய் தீபம் என்ற பெயரில் விற்கின்றனர். வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட கற்பூரத்தையும் விற்கின்றனர்.

இதனால் கோயிலின் சுற்றுப்புறமும், பக்தர்களின் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. கோயில்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படுகிறது.

எனவே, கோயில் வளாகங்களில் கலப்பட நெய் தீபம் விற்க தடை விதித்து, தூய நெய் தீபங்கள் விற்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழக கோயில்களில் நெய் தீபங்களில் தூய நெய் பயன்படுத்தப்படுகிறதா?, இல்லையா? என்பதை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு செய்து பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்.10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x