கோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை - பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மைய நூலகத்தில் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கப்பட்டது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மைய நூலகத்தில் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கப்பட்டது
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கும் பணியை அங்குள்ள தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து நடத்தி வருகிறது.

நூல்களின் அருமை, வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தமிழ்ச் சங்கம் முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது, பென்னாகரம் வட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கோடை விடுமுறை காலமான மே மாதம் முழுக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முதல் நிகழ்வு பென்னாகரம் மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான உறுப்பினர் சேர்க்கையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் மைய நூலக அலுவலர் பூபதி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் 12 மாணவ, மாணவியருக்கு உறுப்பினர் சேர்க்கை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆசிரியர் பயிற்றுநர் சுதர்சனம் பேசும்போது, ‘நூல்களால் தான் மனிதர்களின் அறிவும், பண்பும், ஆற்றலும், வெற்றி பெறுவதற்கான பேரூக்கமும் கிடைக்கிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் நூல்கள் தான் துணை நிற்கின்றன’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மணிவண்ணன், நாகமாணிக்கம், சந்தோஷ்குமார், கணேஷ், தாமோதரன், ரேவதி, பெருமாள், சரவணன், லெனின், குமார், கோவிந்தசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நூலகர்கள் உமா, புருஷோத்தமன் ஆகியோர் நன்றி கூறினர்.

இதுகுறித்து, பென்னாகரம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘பென்னாகரம் மைய நூலகத்தில் மே மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறோம். நூலகத்தில் உறுப்பினராகும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர உயர அறிவுலகின் எல்லையும் விரிவடைந்து கொண்டே செல்லும். இந்த நோக்கத்துக்காகவே இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பென்னாகரம் வட்டத்தில் உள்ள நூலங்களில் இம்மாதம் முழுக்க வழங்கப்பட உள்ள இலவச உறுப்பினர் சேர்க்கையில் இணைந்திட மாணவ, மாணவியர் பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தை அணுகலாம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in