அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம்
அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக, பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு சென்றார். இதனால், ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அப்போது, அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களின் ஆர்சி புத்தகங்கள், கணினி உள்பட பல பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வாறு அதிமுக தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தக் கலவரம் தொடர்பான வழக்குகளை தற்போது சிபிசிஐடி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதிமுக, அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த பொருட்கள் அனைத்தும் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தப் பொருட்களைத் திரும்பத் தரக் கோரி அதிமுக, பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டப் பொருட்களை மனுதார் சிவி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in