Published : 04 May 2023 06:10 AM
Last Updated : 04 May 2023 06:10 AM
சென்னை: சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், டிக்கெட்வாங்க பெண்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. டிக்கெட் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை டிக்கெட் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிலர் அத்துமீறி வரிசைக்குள் நுழைய முற்பட்டனர். போலீஸார் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். மேலும், வரிசையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட ரசிகர்கள் மீதும் லேசான தடியடி நடத்தப்பட்டது.
பெண்கள் வரிசையிலும் கூட்டம்: டிக்கெட் வாங்குவதற்குப் பெண்கள் வரிசையிலும் கூட்டம் அலை மோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் பரிதவித்தனர்.
மேலும் டிக்கெட் வாங்குவதற்காக மாற்றுத் திறனாளிகளும் அதிகம் பேர் வந்திருந்தனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் நெரிசலில் சிக்கி மாற்றுத் திறனாளிகள் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களை வரிசையிலிருந்து போலீஸார் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் போலீஸாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டது. பின்னர் போலீஸார்பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். இச்சம்பவங்களால் சேப்பாக்கம் பகுதி நேற்று மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT