

சென்னை: டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் பயன்பாடு குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)மால் ஷாப்பில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைக் கொண்டுதான் தமிழ்நாடு அரசு நடப்பதை போல ஒரு தோற்றத்தை வெளியிட்டு சில நேரங்களில் செய்தி வெளியிடுவது மிகவும் வேதனைக்குரியது.
மால் ஷாப்களில் டாஸ்மாக்நிறுவனத்தின் மூலம் ஆட்டோமேட்டிக் வெண்டிங் (தானியங்கி இயந்திரம்) பயன்பாடு குறித்து சமீபத்தில் தவறான செய்தி வெளிவந்தது. மால்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாத கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் யாரும் சென்று மதுபானம் வாங்க முடியாது. அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. இதை தெரிந்து கொள்ளாமல், தவறான செய்திகளும் வெளியாகி வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மொத்தம் 4 கடைகளில் ஆட்டோமேட்டிக் வெண்டிங் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதைத் தடுப்பதற்காகவும், டாஸ்மாக்கில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும்தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று ஒரு கவனஈர்ப்பு தீர்மானமோ அல்லது ஒரு தனி நபர் தீர்மானமோ எதிர்க்கட்சிகள் கொடுத்திருப்பார்களா? கடந்த ஆட்சியில் கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிகள் அருகாமையில் திறக்கப்பட்ட சுமார் 96 டாஸ்மாக் மதுபானக் கடைகள், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வித அறிவிப்பும் இன்றி மூடப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 500 கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான கணக்கெடுப்பு பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்தால்மதுபானம் வழங்கப்படும்பட்சத்தில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படுவதால் கூடுதல்விலை கொடுத்து வாங்குவதாக வரும் புகார்களை தவிர்க்க முடியும். அவ்வாறு கூடுதல் விலைக்குவிற்றதாக வந்த புகார்களின் அடிப்படையில் 1,977 பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு அல்லாமல் சுமார் ரூ.5.50 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.