Published : 04 May 2023 06:48 AM
Last Updated : 04 May 2023 06:48 AM

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நீதிமன்றம்: பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பெருமிதம்

சென்னையில் ஆசிய ஊடகவியல் கல்லூரி சார்பில் சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற (இடமிருந்து வலம்) கல்லூரி டீன் நளினி ராஜன், விருதாளர்கள் நீல் மாதவ், அனிசன் ஜப்ரி, அருணப் சைக்கியா, தன்மயி பாதுரி, கல்லூரி தலைவர் சசிகுமார், விருது தேர்வுக் குழுவை சேர்ந்த ரூபன் பானர்ஜி, கிருஷ்ணா ஆனந்த், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், ‘இந்து’ என்.ராம், ஆசிய ஊடகவியல் கல்லூரி புளூம்பெர்க் திட்டத்தின் டீன் குஷ்பு நாராயண்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிய ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியின் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) பட்டமளிப்பு விழா, சிறந்தஊடகவியலாளருக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை உச்ச நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் சந்தர் உதய்சிங் வழங்கினார்.

புலனாய்வு இதழியலுக்கான விருதை அருணப் சைக்கியாவுக்கும், கே.பி.நாராயணகுமார் நினைவு விருதான சமூக தாக்கத்துக்கான இதழியல் விருதை நீல்மாதவ், அனிசன் ஜப்ரிக்கும், புகைப்பட இதழியல் விருதை தன்மயி பாதுரிக்கும் வழங்கினார்.

பின்னர், ‘ஊடக சுதந்திரத்தை மீட்பது’ என்ற தலைப்பில் லாரன்ஸ்தன பின்கம் நினைவு சொற்பொழிவுநடந்தது. இதில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங் பேசியதாவது: அவசர காலத்தில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் 21 மாதங்கள் நீடித்தன. பின்னர் ஊடகங்கள் உத்வேகத்துடன் வெளிவந்தன. பின்னர் தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள் ஏராளமாக வந்தன. ஊடகங்கள் மீதான தாக்குதல் அவசர காலம்போல இருக்காது என்ற எண்ணம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தகர்ந்துவிட்டது.

காஷ்மீரில் இணையதள முடக்கம், கேரளாவில் சேனலுக்கு தடை,தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தம் தொடர்பான வழக்குகளில் அரசுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. ஊடகசுதந்திரத்தை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிய ஊடகவியல் கல்லூரிதலைவர் சசிகுமார், ஊடக மேம்பாட்டு அறக்கட்டளை அறங்காவலர் ‘இந்து’ என்.ராம் பேசினர். கல்லூரி டீன் நளினி ராஜன் வரவேற்றார். கல்லூரி புளூம்பெர்க் திட்டத்தின் டீன் குஷ்பு நாராயண் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x