

மதுரை: மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஐபிகளுக்காக 137 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஏவி மேம்பாலத்தின் சுவரை உடைத்து தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றுக்குள்ளேயே அவர்களின் வாகனங்களை நிறுத்து வதற்கும் வசதி செய்துள்ளது சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (மே 5) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இந்தவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. அவர்களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மாநகர், புறநகர் காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் (விஐபிகள்), அவரது குடும்பத்தினர் வருவார்கள். அவர்களது வாகனங்கள் இந்த முறை குருவிக்காரன் சாலை மேம்பாலம், காமராஜர் சாலை, கீழவாசல் சிக்னல், கீழவெளி வீதி, நெல்பேட்டை வழியாக ஏவி மேம்பாலத்துக்குள் அனுமதித்து கோரிப்பாளையத்தில் மேம்பாலம் முடிவதற்கு முன் வலது புறமாக செல்ல ஆழ்வார்புரம் மூங்கில் கடை வீதியில் ஒரு தனி வழிப்பாதை அமைத்துள்ளனர்.
இதற்காக பாரம்பரியமிக்க பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்து பாதை அமைத்துள்ளனர். மேலும், அவர்களது வாகனங்களை மூங்கில் கடை வீதி வழியாக அனுமதித்து ஆழ்வார்புரம் வைகை ஆற்றின் உள்ளேயே 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வசதி செய்து கொடுத் துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் போதிய பாதுகாப்பு இன்மையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டை விடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தாமல் விழாவில் பங்கேற்க வரும் விஐபிகளை எப்படி கவ னித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்து அதிலிருந்து பாதை அமைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த ஏவி மேம்பாலம் சரியான பராமரிப்பு இல்லாவிட்டாலும், ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தைச் சரி செய்ய அதிகாரிகள் முன்வராமல் அதை உடைத்து தனி வழி ஏற்படுத்தி இருப்பது சரியல்ல. பாலத்தின் மீது ஏற்கெனவே அதிக பாரம் உள்ள நிலையில் விஐபி வண்டிகளை நிறுத்தினால் பாலம் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
பாலத்தை சரி செய்வதற்கு எங்கள் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நடவடிக்கை இல்லை. சித்திரைத் திருவிழா நேரத்தில் மட்டுமே ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தற்காலிகமாக தடுக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கழிவுநீர் கலப் பதைத் தடுக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.