Published : 11 Sep 2017 11:42 AM
Last Updated : 11 Sep 2017 11:42 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அரசு அடக்குமுறைகளை ஏவுவதா?- ராமதாஸ் கண்டனம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தி பணிய வைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்தாமல் போராட்டத்தை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்; அதுவரை 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; ஒப்பந்த பணி முறையை ஒழித்து விட்டு அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகும்.

தமிழக அரசு நினைத்திருந்தால் இந்தக் கோரிக்கைகளை எப்போதோ நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பதாகக் கூறி, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள் பெயரளவிலேயே உள்ளனவே தவிர இன்று வரை எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு செயல்படுத்தாததன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது. தங்களின் கோரிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக நம்பிக்கையுடன் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஒரு கட்டத்தில் தமிழக அரசின் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதால்தான், தங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வேறுவழியின்றி கடைசி முயற்சியாகவே இப்போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; பள்ளிகளில் கற்பித்தல் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மை. தமிழகம் முழுவதும் இன்று முதல் மேல்நிலை மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. வேலை நிறுத்தத்தால் தேர்வுகளும் பாதிக்கப்படும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதற்கெல்லாம் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை ஓராண்டுக்கும் மேல் வழங்காமல் வைத்திருந்ததுதான் அத்தனைக்கும் காரணமாகும்.

அரசு ஊழியர்கள் பல மாதங்களுக்கு முன்பே வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டுவிட்ட நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை அரசு தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், போராட்டம் தொடங்குவதற்கு முதல் வாரம் அமைச்சர்கள் குழுவும், முதல் நாளில் முதலமைச்சரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுக்களில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதை விட, அவர்கள் அச்சுறுத்தப்பட்டது தான் அதிகமாகும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர் கூட்டமைப்பை உடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை பினாமி முதல்வர் ஈடுபட்டார்.

அடுத்தக்கட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்று விளக்கம் கேட்டு 85,000 ஊழியர்களுக்கு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அரசு அச்சுறுத்தியுள்ளது. இத்தகைய அடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்.

2003-ம் ஆண்டில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சர் இறுதியில் தோல்வியடைந்ததை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே, இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x