Published : 03 May 2023 05:45 AM
Last Updated : 03 May 2023 05:45 AM

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சிஏஜி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ள அதிமுகவின் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், முன்னாள் அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘உங்களில் ஒருவன்’பதிவில் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குமுதல்வர் அளித்த பதில்களும் வருமாறு: ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்றுசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாடு முழுவதும்எதிரொலிப்பதுடன், உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தியுள்ளதே!

இந்தியா முழுவதுக்குமானதுதான் தமிழகத்தின் குரல். சமூக நீதியைப் போல், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழகம்தான் தலைநகர். கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால் அதைவிட மக்களாட்சிமாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது.

அதனால்தான் காலநிர்ணயம் வேண்டும் என்கிறோம். இதை ஏற்றுஎன் குரலுக்கு வலுசேர்த்த மாநிலமுதல்வர்களுக்கு நன்றி. இதேபோல், மற்ற மாநில முதல்வர்களும் ஆதரிப்பாளர்கள் என நம்புகிறேன்.

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. எதிலெல்லாம் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது?

மிகுந்த மனநிறைவோடு இருக்கிறேன். 5 ஆண்டுகால ஆட்சியில் 2 ஆண்டுகள் என்பது பாதிகூட இல்லை. ஆனால், இரண்டே ஆண்டுகளில், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கும் மேல் நிறைவேற்றி இருக்கிறோம். மிகக்குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை தீட்டியது நாட்டிலேயே திமுக அரசாகத்தான் இருக்க முடியும். பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிர்வாகத்தை ஓரளவுக்கு மீட்டுள்ளோம். இன்னும் சரிசெய்ய வேண்டியது நிறைய உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால்தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என உள்துறை அமைச்சரே பேசியுள்ளாரே?

சிறுபான்மையினர் மீதான வன்மம் வெளிப்படுகிறது. பாஜகவுக்குவாக்களிக்காத பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். ஆனால், அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். பாஜக தன் வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையாக காட்ட நினைக்கிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் மனசாட்சி உறங்கிவிடாது என்று நம்புகிறோம்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ குறித்து?

அவரே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளார். மக்கள் பணி செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. மேலும் இதைப்பற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவோருக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாட திட்டமிட்டுள்ளீர்கள்?

கருணாநிதியின் நூற்றாண்டு ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை நாடே திரும்பிப் பார்க்கும்படி கொண்டாட இருக்கிறோம்.நூற்றாண்டு விழாவை குடியரசுத்தலைவர் தொடங்கி வைப்பது சிறப்பானது. கிண்டியில் உள்ளகலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையையும் திறக்கிறார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் விரைவில் திறக்கப்படுகிறது.

தொழிலாளர் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைத்ததை பலவீனமாகக் கட்டமைக்க ஒரு தரப்பினர் முயல்கின்றனரே?

மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி. அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவுமில்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது குறித்துசிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த நடவடிக்கை என்ன?

சிஏஜி அறிக்கை அதிமுகவின் முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருப்பதால் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது. ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x