Published : 03 May 2023 06:08 AM
Last Updated : 03 May 2023 06:08 AM
சென்னை: செய்தித் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவுதுலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வையிடும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் அறிவிப்பு: சட்டப்பேரவையில், கடந்த ஏப்.20-ம் தேதி தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிலை தொடர்பாக அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளிக்கும்போது, ‘‘முதல்வரின் அறிவுறுத்தல்படி, சிலைகளுக்கு அருகில் க்யூஆர் கோடு வைக்கப்பட்டு, அது செய்தித் துறையின் இணையதளத்தில் இணைக்கப்படும்.
அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் பண்ணினால், சிலையைப் பற்றிய முழு தகவல்கள் வரும். இப்பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த வசதிநேற்று தொடங்கி வைக்கப்பட்டுள் ளது.
360 டிகிரி கோணத்தில் படம்: சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில், செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் நினைவகங்கள், சிலைகளை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து, விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர்கோடு) மூலம் பொதுமக்கள் பார்வையிடும் வசதியை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை தனது கைபேசியில் ஸ்கேன் செய்து, அதில் வரும் விவரங்களை பார்வையிட்டார். அப்போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் விளக்கினர்.
முதலில் திருவள்ளுவர் சிலை அதன்பின், அடுத்தடுத்து மற்ற சிலைகள் மற்றும் நினைவகங்களில் இந்த க்யூஆர் கோடு வசதி ஏற் படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்வளர்ச்சித் துறை செயலர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT