

கள்ளக்குறிச்சி: திருநங்கைளின் இஷ்ட தெய்வமாகக் கருதப்படும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நேற்று சுமார் 50 ஆயிரம் திருநங்கைகள் மணப்பெண்ணாக தங்களை அலங்கரித்துக் கொண்டு வந்து, அக்கோயிலின் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் விழுப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டையிலும் நடைபெற்றது.
இதையடுத்து திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும்(தாலி கட்டுதல்) நன்நிகழ்வு நேற்று மாலை கூவாகத்தில் தொடங்கியது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் மணப்பெண் அலங்காரத்தில் வந்து, கூத்தாண்டவரை தரிசனம்செய்தனர். தொடர்ந்து கூத்தாண்டவர் கோயில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர்.
மாலையில் தொடங்கிய இந்நிகழ்வு இரவு வரை தொடர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களை திருநங்கைகள் ஆர்வமுடன் வாங்கினர். விடிய விடிய கோயில் வளாகத்தில் திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
திருநங்கைகள் மற்றும் கிராம மக்களின் வருகையையொட்டி கூவாகத்தில் 1,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டு கழிப்பிட வசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். தாலி கட்டும் நிகழ்வைத் தொடர்ந்து, இன்று காலை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.