

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக அறுந்து விழுந்தமின்கம்பியை மிதித்த கணவன், மனைவியும், மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டியும் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல்நேற்று காலை வரை விடிய விடிய பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ மழை பதிவானது.
இதேபோல, திருக்காட்டுப் பள்ளி 127, பூதலூர் 114, மதுக்கூர் 90, பட்டுக்கோட்டை 83, கல்லணை 73, வெட்டிக்காடு 66, ஒரத்தநாடு 64, திருவையாறு 53, கும்பகோணம் 45, ஈச்சன்விடுதி 45, அணைக்கரை 44, தஞ்சாவூர் 41 மி.மீ மழை பெய்தது.
கூலித் தொழிலாளி: இந்நிலையில், பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உடையப்பன்(70) என்பவர் நேற்று அதிகாலை வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, அங்கு மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் அதே இடத்திலேயே உயிரி ழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி சம்பூர்ணமும்(62) மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரும் உயிரிழந்தார்.
தகவலறிந்த பேராவூரணி போலீஸார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வானை(70), இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
மரக்கிளை முறிந்தது: அப்போது, அங்கு பெய்த மழை காரணமாக சேதமடைந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து தெய்வானை மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த அவர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.