

திருப்பூர்: பல்லடம் அனுப்பட்டியில் இயங்கி வரும் இரும்பு உருக்காலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி 40 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்தை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேற்று சந்தித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலை சுற்றுச் சூழல் மாசு பாட்டை ஏற்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
பல்லடம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஆய்வுப் பணிகளின்போது, ஏராளமான பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூமலூர் ஊராட்சி வலையபாளையம் கிராமத்துக்கு இதுநாள் வரை எவ்வித பேருந்து வசதியும் இல்லை. அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்லடம் - சோமனூர் (பி-9) அரசுப் பேருந்தை வலைய பாளையம் வரை நீட்டித்துத்தர வேண்டும்.
பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு நடைபெறுவதில்லை. கிராமப்புற ஏழை மக்கள் வீட்டு அடமானக் கடன் பெறுவதற்கும் பெயர் மாற்றங்கள் செய்வதற்கும் மிகவும் நெருக்கடியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கத்தை தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தேன்.
அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார், என்றார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரம சிவம் ஆகியோர் உடனிருந்தனர்.