

உதகை / கோவை: நீலகிரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றுமுதல் 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கப்படும் என்று, உணவுத் துறை கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உதகையை அடுத்த பாலகொலா மீக்கேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடை மற்றும் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக, பொருட்களின் இருப்பு, விலைப் பட்டியல், அத்தியாவசியப் பொருட்களின் மாதிரிகள் ஆகியவற்றையும், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு மற்றும் அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலக சிறு தானியங்கள் ஆண்டையொட்டி, நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நாளை (இன்று) உதகையை அடுத்த பாலகொலா மீக்கேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் நிகழ்ச்சி, கூட்டுறவு துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் மூலமாக, 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு பெறப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்துக்கு மாத விநியோகத்துக்கு 400 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படுகிறது. ஆனால், சுமார் 450 மெட்ரிக் டன் கேழ்வரகு இருப்பில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதேபோல தருமபுரி மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம், மற்ற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சி நாதன், தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகானந்தம், வழங்கல் அலுவலர் (பொ) லோகநாதன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். முன்னதாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ அரிசியை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக கேழ்வரகு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் கேழ்வரகு வழங்க, விவசாயிகள் அதனை பயிரிட வேண்டும். கேழ்வரகு அதிகளவில் உண்ணாமல் இருப்பதால், விவசாயிகள் குறைந்த அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
இனிமேல் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுவார்கள். விவசாயிகள் பயிரிடும் கேழ்வரகை, கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து நியாய விலைக்கடை மூலமாக மக்களுக்கு வழங்க உள்ளது. பகுதி நேரமாக இயங்கும் நியாய விலைக் கடைகள், மக்கள் தொகைக்கேற்ப முழு நேர கடையாக மாற்றப்படும்" என்றார்.