Published : 03 May 2023 06:29 AM
Last Updated : 03 May 2023 06:29 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களின் பொதுமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். அதற்கான வழிமுறைகள் தற்போது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் அரசுப் பள்ளியில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 17-ம்தேதி பணிநிரவல்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து உபரி ஆசிரியர்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பணிநிரவல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மனைவியர், விதவைகள், மனைவியை இழந்தவர்கள், 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள், விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதவிர மாற்றுத் திறனாளிகள் மற்றும் என்சிசி பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் எவரேனும் உபரியாக இருந்தால் அவர்களுக்கு விலக்குஅளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பதிலாக அதே பள்ளியில் அடுத்து உள்ள இளையவரை உபரியாக தேர்வு செய்ய வேண்டும்.
சுயவிருப்பத்தில் ஏதேனும் ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்குச் செல்லமுன்வந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று பணிநிரவல் செய்யலாம். மேலும், பணிநிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முறையாக மேற்கொண்டு கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதவாறு அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளும் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை இன்று (மே 3) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT