Published : 03 May 2023 06:12 AM
Last Updated : 03 May 2023 06:12 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் சிகிச்சை மையம் திறப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இங்கு அறுவை சிகிச்சை, ரத்த போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சிறுநீரக கல்லை அகற்றலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் (சிஎஸ்ஆர்) ரூ.2.30 கோடியில் ‘மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்கசிகிச்சை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு மருத்துவமனை டீன் கே.நாராயணபாபு தலைமை வகித்தார். புதிய சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், சிறுநீரகவியல் துறை தலைவர் பெரியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷா ஷகீன், மொபீஸ் இந்தியா பவுண்டேசன் பொது மேலாளர் ஜு சியாங் கியு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த மருத்துவமனையில் ரூ.125 கோடியில் டவர் பிளாக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை சார்பில் ரூ.172 கோடியில் 442 படுக்கைகள் கொண்ட கட்டிடப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

பணிகள் முடிந்ததும் ரூ.36.80 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தரப்படும். பின்னர், கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மேலும், இந்த மருத்துவமனையில் ரூ.28.02 கோடியில் தாய் - சேய் நல மையத்துக்கு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது திறக்கப்பட்ட மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இனிமேல் அறுவை சிகிச்சை, ரத்தப் போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சில மணி நேரங்களிலேயே சிறுநீரக கல்லை அகற்றிவிடலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x