Published : 03 May 2023 04:15 AM
Last Updated : 03 May 2023 04:15 AM
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் உலா வரும் இடங்களை எளிதில் கண்டறிய, ஜிபிஎஸ் செயலியை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடக்க இருக்கிறது.
கள்ளழகரை மட்டும் இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசிப்பர் என மாநகராட்சி கணித்துள்ளது. கடந்த ஆண்டு திருவிழாவில், மாவட்டக் காவல் துறை தனது மதுரை காவலன் என்ற மொபைல் செயலியில், கள்ளழகரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள வசதியாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது.
இதற்கு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, இச்செயலியை ஏராளமானோர் தங்களது மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்துபயன்படுத்தினர். இதன்மூலம், பக்தர்கள் கள்ளழகரின் தரிசனத்துக்காக தேவையில்லாமல் அலைவது தவிர்க்கப்பட்டது. தவிர, வாகன ஓட்டிகளும் இதனைப் பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மாற்று வழியில் செல்ல உதவியாக இருந்தது.
கடந்த ஆண்டு கள்ளழகர் உலாவுக்கு மட்டும் ஜிபிஎஸ் செயலிசெயல்படுத்தப்பட்டது. ஆனால்,அம்மன், சுவாமி வீதியுலா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் ஜிபிஎஸ் செயலி செயல்படுத்தப்படவில்லை. இதனால், பக்தர்கள் அம்மன், சுவாமி உலா நேரத்தையும், இருப்பிடத்தையும் கண்டறிய முடியாமல் சிரமப்பட்டனர்.
ஆனால், இந்தாண்டு பக்தர்கள் கள்ளழகரின் இருப்பிடத்தையும் அறிய முடியாத வகையில், ஜிபிஎஸ் செயலியை காவல் துறை இன்னும் செயல்படுத்தவில்லை. இதனால், ஆற்றில் கள்ளழகர் இறங்க வரும்போதும், மீண்டும் இருப்பிடம் திரும்பும்போதும் சுவாமி எந்த இடத்தில், எந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார் என்பதை அறிய பக்தர்கள் மிகவும் சிரமப்பட நேரிடும்.
எனவே, கடந்தாண்டை போல் கள்ளழகர் இருப்பிடம் குறித்தும், மீனாட்சி அம்மன், சுவாமி உலா குறித்தும் ஜிபிஎஸ் செயலியை செயல்படுத்த காவல் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் முன்வரவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT