

தஞ்சாவூர்: காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட, மாநகர திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்றிரவு தஞ்சாவூரில் நடைபெற்றது.
மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் நான் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி, அந்த திட்டத்தை நிறுத்த வைத்தோம். ஆனால், இப்போது யார் யாரோ பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர்.
அரசியலில் பேச தகுதி இல்லாதவர் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. நான் 10 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளார். இதற்கு அவர் நீதிமன்றத்துக்குத் தான் சென்றிருக்க வேண்டும். நான் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து 12 நாட்களாகி விட்டது இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.
இதனால் அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வரும் 8-ம் தேதி கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன். மேலும், ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கும் தொடரப்படும். திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க சதி நடக்கிறது. அதனை எதிர்கொள்ள ஒவ்வொரு திமுக தொண்டனும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.