நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது; போலீஸ் குவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது; போலீஸ் குவிப்பு
Updated on
1 min read

நீட்டுக்கு எதிராக நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மகாலிங்கபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீட் தேர்வை எதித்து சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1-ம் தேதி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

நீட் விவகாரம் தமிழகம் எங்கும் ஆவேச அலையை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் மரணம் மேலும் இளைஞர்கள் மாணவர்களிடம் கோபாவேசத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்தது. இந்த பிரச்சனையில் தலையிட்ட உச் சநீதிமன்றம் தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் நுங்கம்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானவர்கள் மகாலிங்கபுரம் சாலையில் திடீரென கூடினர். நீட்டை எதிர்த்து ஆவேச கோஷம் எழுப்பிய படி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தாலும் பெண் போலீஸார் இல்லாத நிலையில் மாணவிகளை அகற்ற சிரமப்பட்டனர்.

இதனால் மறியல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பள்ளி தலைமை ஆசிரியை வந்து வேண்டுகோள் வைத்தும், போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியும் போராட்டத்தை கைவிட மாணவிகள் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in