Published : 02 May 2023 06:27 AM
Last Updated : 02 May 2023 06:27 AM

முதல்முறையாக ஏற்றுமதி முட்டைக்கு விலை நிர்ணயம்: கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் தகவல்

நாமக்கல்: முதல்முறையாக ஏற்றுமதி முட்டைக்குத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) விலை நிர்ணயம் செய்கிறது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிர்ணயம் செய்யும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்யவேண்டும். ஏற்றுமதி முட்டைக்கும் முதல்முறையாக என்இசிசி விலை நிர்ணயம் செய்கிறது.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். நாமக்கல்லிலிருந்து முட்டை கொண்டு செல்லும் இடம் வரை போக்குவரத்து செலவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த விலைக்கே பண்ணையாளர்கள் முட்டையை விற்பனைசெய்ய வேண்டும். பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தைக் கேட்டு என்இசிசி முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. 80 வாரம் கடந்த வயது முதிர்ந்த கோழியை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் கோழிக்கும், முட்டைக்கும் நல்ல விலை கிடைக்கும்.

சிறியது, நடுத்தரம், பெரியது என முட்டை மூன்று தரமாகப் பிரிக்கப்பட்டு, சிறிய முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாகக் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும். பள்ளிகளுக்குக் விடுமுறை விடப்பட்டாலும், சுற்றுலா அதிகரித்துள்ளதால் முட்டையின் தேவை அதிகம் உள்ளது. எனவே,கோடை காலத்தில் முட்டை விலை குறைய வாய்ப்பில்லை என்றார். பேட்டியின்போது, சங்க செயலாளர் சுந்தர் ராஜ் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x