Published : 02 May 2023 06:24 AM
Last Updated : 02 May 2023 06:24 AM

விலை வீழ்ச்சியால் தக்காளி, கத்தரி குப்பையில் கொட்டப்படுவதை தடுக்க விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: விலை வீழ்ச்சியால் தக்காளி, கத்தரி குப்பையில் கொட்டப்படுவதை தடுக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சென்னை,நீலகிரி தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் ஒரே காய்கறி தக்காளி ஆகும்.

சந்தைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.50 வரை விற்பனைசெய்யப்பட்ட தக்காளி, இப்போதுமொத்த விலை சந்தைகளில் கிலோரூ.5-க்கும், சில்லறை விலைக்கடைகளில் ரூ.10-க்கும் மட்டுமேவிற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தக்காளியின் கொள்முதல் விலை கிலோ ஒரு ரூபாய் என்ற அளவுக்குசரிந்துவிட்டது.

அதனால், பல இடங்களில் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே அழுகுவதற்கு விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். கத்தரிக்காய் விலையும் இதேபோல சரிந்துள்ளது.

இது ஏதோ இந்த ஆண்டு மட்டும்புதிதாக ஏற்பட்டுள்ள சூழல் அல்ல. ஒவ்வோர் ஆண்டும் விவசாயிகள் கண்ணீர் விடுவது தொடருகிறது.

இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வுகாய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகைசெய்யப்பட்டிருக்கிறது.

கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் விவசாயிகளுக்கு விளைபொருட்களை குப்பையில் கொட்டவேண்டியிருந்திருக்காது. அத்துடன்,பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழகஅரசுக்கு உண்டு. காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகத்தை இப்போது ஆளும்திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே, இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x