

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உட்பட்ட கத்தாழை ஊராட்சியில் நேற்று தொழிலாளர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் கரிவெட்டி, கத்தாழை கிராமங்களைச் சேர்ந்தபொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புவனகிரி ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளர் சுமத்திரா தேவி கிராம சபை அதிகாரியாக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பொது மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், “என்எல்சி இந்தியா நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ரூ.40 லட்சம் தர வேண்டும். ஒருவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
‘வேலை வேண்டாம்’ என்று கூறும் குடும்பத்துக்கு ஒரே தவணையாக ரூ.30 லட்சம் தர வேண்டும். மீள் குடியேற்றம் அமைத்து கொடுக்கும் இருப்பிட வீட்டு மனையாக ஒடிசாவில் என்எல்சி தருவது போல 10.5 சென்ட் வீட்டு மனை பட்டாவுடன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை கிராமசபை அதிகாரி பெற்றுக் கொண்டார். கிராம சபை தீர்மான புத்தகத்தில் என்எல்சி நில எடுப்பில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வேண்டும் என்று பொது மக்களால் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்டது.