

சிவகங்கை: உணவு, காய்கறி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரித்து வரும் காஞ்சிரங்கால் ஊராட்சித் தலைவருக்கு பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் 10,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆலோசனைப்படி ‘ரூர்பன்’ திட்டத்தில் ரூ.66 லட்சத்தில் உணவு, காய்கறி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை ஊராட்சித் தலைவர் மணிமுத்து ஏற்படுத்தினார்.
இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி மற்றும் சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவுப்பொருட்களின் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர்.
அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகிறது. பிறகு அதன் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 டன் கழிவுகள் மூலம் 220 கிலோ வாட் மின் சாரம் தயாரிக்கின்றனர். இந்த மின்சாரத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகள், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஆக.10-ம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்துக்காக அதே ஆண்டு ஆக.29-ம் தேதி அந்த ஊராட்சித் தலைவர் மணிமுத்துவை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை ஆளுநர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி பாராட்டினார். இதில் மணிமுத்துவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணிமுத்து கூறியதாவது: எங்கள் ஊராட்சிக்கு விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் தினமும் 100 கிலோ உணவு, காய்கறிக் கழிவுகள் கிடைக்கின்றன. இதுதவிர சிவகங்கை நகராட்சி பகுதியில் இருந்தும் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.