Published : 19 Sep 2017 09:03 AM
Last Updated : 19 Sep 2017 09:03 AM

புதுச்சேரியில் அரசு அனுமதியின்றி சென்று கடலில் சிக்கிய இயற்கை ஆர்வலர்கள் மீட்பு

புதுச்சேரியில் அரசு அனுமதியின்றி சென்று கடலில் சிக்கிய இயற்கை ஆர்வலர்கள் மீட்கப்பட்டனர். கடலில் பறவைகளைப் பார்க்க சென்ற இவர்களை கடும் சிரமத்துக்கு இடையில் கடலோரக் காவல்படையினர் காப்பாற்றியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

புதுச்சேரி சுற்றுலா குழுவிடம் இருந்து புதுவையில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், நடுக்கடலில் என்ஜின் பழுதால் 18 பேருடன் சென்ற விசைப்படகு மூழ்கும் நிலையில் இருப்பதாகவும், உடனே உதவுமாறும் தெரிவிக்கப்பட்டது.

மீட்பு படகு சென்றது

இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படை, புதுச்சேரி காவல்துறை இணைந்து கடலில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தன. இதையடுத்து கடலோரக் காவல்படை டிஐஜி எஸ்சி.தியாகி உத்தரவின்படி மீட்பு படகு (இன்டர்செப்டர் ஐசி -119) இரவு 8 மணிக்கு தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி நடப்பதாலும் போதிய வழிகாட்டி விளக்கு வசதி இல்லாமலும் இருந்ததால் கடும் சிரமத்துக்கு இடையே மீட்பு படகுக் குழு முகத்துவாரத்தை கடந்து கடலுக்குள் சென்றது. கடலோரக் காவல் படை மீட்பு குழு பழுதான படகில் தத்தளித்த 12 பேரை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தது.

ஏற்கெனவே, கடலில் தத்தளித்தவர்களில் 6 பேரை, சில மீனவர்கள் காப்பாற்றி தங்கள் படகில் தேங்காய்த் திட்டு துறைமுகத்துக்கு அழைத்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்டவர்கள் நேற்று அதிகாலை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதல்வர் பாராட்டு

இந்நிலையில் கடலில் சிக்கியவர்களை திறம்பட செயல்பட்டு மீட்ட கடலோரக் காவல் படை, புதுவை காவல்துறையினருக்கு, நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்து கவுரவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசைப்படகின் உரிமையாளர் தரப்பு கடலில் பறவைகளை காணச் செல்வதற்காக அரசிடம் அனுமதி கேட்டனர். பாதுகாப்பு காரணங்களால் அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் தமிழகம், கர்நாடகம், மும்பையில் இருந்து வந்திருந்த இயற்கை ஆர்வலர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் தங்கள் பணியை முடித்து மாலை 5 மணிக்குள் வந்திருக்க வேண்டும். அவர்கள் சென்ற விசைப்படகு கடல் பாதுகாப்புச் சட்டத்தின்படி 1 கடல் மைல் தொலைவுக்குத் தான் இயக்க வேண்டும். ஆனால், அவர்கள் அந்த படகின் மூலம் 19 கடல் மைல் தொலைவுக்கு (40 கி.மீ) சென்றுள்ளது தெரியவந்தது. அந்தப் படகில் தகவல் தொடர்பு சாதனங்கள், விளக்குகள், உயிர் காக்கும் கருவிகள், உடைகள் எதுவும் இல்லாமல் சென்றுள்ளனர்.

ஆழ்கடலுக்கு சென்றபோது, படகின் 2 என்ஜின்களும் பழுதாகி விட்டன. கடலில் இருள் சூழ்ந்த நிலையில் படகில் கடல் நீர் புகுந்ததால் அதில் இருந்தவர் போலீஸாரை தொடர்புகொண்டு தகவல் அளித்தார். இதையடுத்து கடலோர காவல்படை மீட்புக் குழு, கடல் கொந்தளிப்பு, மோசமான வானிலையையும் மீறி திறம்பட செயல்பட்டு அவர்களை மீட்டு வந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x